மகாராஷ்டிரா மாநிலத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அகில இந்திய கிசான் சபையின் சார்பில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். நாசிக் மாவட்டத்தில் இருந்து சுமார் 200கிமீ தூரம் பேரணியாக நடந்துசென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து, அம்மாநில அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதமாக நாளை (மார்ச் 15) ஒருநாள் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அம்மாநில அகில இந்திய கிசான் சபை சார்பில் இந்த போராட்டமானது நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அம்மாநில அகில இந்திய கிசான் சபையின் பொதுச்செயலாளர் முகுத் சிங், ‘உ.பி. மாநில அரசு 2016ஆம் ஆண்டிலிருந்து மின்கட்டணத்தை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. ஏழு மாவட்டங்களில் மின்துறை தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. மின்கட்டணம் பல்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், விளைச்சலுக்கும் மிக அதிகமாக செலவிட வேண்டி இருக்கிறது. குறைந்தபட்ச ஆதாரவிலை பற்றி அரசு கவலைப்படவில்லை. கடன் தள்ளுபடி குறித்த அரசின் அறிவிப்பும் கண்துடைப்பு நடவடிக்கையாகிப் போய்விட்டது. எனவே, இந்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.