இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு எதிராக இரண்டு லட்சம் பெற்றோர்கள் மனு கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், விரைவில் பள்ளிகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு எதிராக இரண்டு லட்சம் பெற்றோர்கள் மனு கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர். ஜூலை மாதம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவு பெற்றோர்கள் மத்தியில் பயத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸுக்கு மருந்து ஏதும் கண்டறியப்படாத நிலையில், சமூக இடைவெளி ஒன்றே இதனைக் கட்டுப்படுத்தும் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், பள்ளிகளைத் திறந்தால், குழந்தைகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பது கடினமான விஷயம் என்பதால் நோய்த்தொற்று அதிகரிக்கும் எனப் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், கரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரையோ அல்லது கரோனா தடுப்பு மருந்து கண்டறியும் வரையிலோ பள்ளிகளைத் திறக்கக்கூடாது என நாடு முழுவதிலும் இருந்து சுமார் இரண்டு லட்சம் பெற்றோர்கள் அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.