பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 17-ம் தேதி வியாழக்கிழமை முதல் ஒவ்வொரு தபால் நிலையத்திற்கும் விரைவுத் தபாலாக வந்துள்ளது. அதனால் தபால் கொடுக்கப்படும் போது ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு தபால்களை கொடுக்கிறார்கள் தபால் ஊழியர்கள். இந்த தபால்கள் 30-ம் தேதிக்குள் அனைவருக்கும் கொடுத்து முடிக்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியில் பிரதமர் எழுதியதின் தமிழ் மொழியாக்கத்தில் அனுப்பப்படும் அந்த தபாலில் மத்திய அரசின் சாதனைகள், பொதுமக்களுக்கான வீடு கட்டும் திட்டம், குழந்தைகளுக்கான திட்டம், பிணையில்லாத கடன் திட்டம், முன்பணமில்லாமல் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சாதனைகள் விளக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாக ஒவ்வொரு தபால் நிலைய ஊழியர்களும் இதனால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதாவது அனைத்து தபால்களும் விரைவுத் தபால்களாக வந்துள்ளதால் அவற்றை பெயர் எழுதி உரியவரிடம் கையெழுத்து வாங்க வேண்டியுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதால் வேலை நேரத்தை கடந்தும் தபால் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும் பல வருடங்களுக்கு முன்பு இறந்தவர்களின் பெயர்களிலும் தபால்கள் வருவதால் அந்த குடும்பத்தினர் அந்த தபால்களை வாங்க மறுத்து வருகின்றனர். மேலும் இறந்தவர் குடும்பங்களில் மற்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு தபால்கள் ஒப்படைக்கப்படுகிறது. இதைவிட முக்கியமான ஆதார் அட்டை தபாலில் அனுப்பிய போதும் கூட சாதாரண தபாலில்தான் வந்தது. ஆனால் மோடியின் கடிதம் விரைவுத் தபாலாக வருகிறது என்றனர் தபால் நிலைய ஊழியர்கள். மேலும் கீரமங்கலம் தபால் நிலையத்திற்கு 13 கிளை அஞ்சலகத்திற்கு இரண்டு நாட்களில் சுமார் 10 ஆயிரம் தபால்கள் வந்துள்ளது என்றனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் மற்றும் கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறும் போது, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கி விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து, இருக்க வீடு இல்லாமல், உண்ண உணவு இல்லாமல், தென்னை, வாழை, பலா என்று வாழ்வளித்த அத்தனை மரங்களையும், மொத்த விவசாயத்தையும் இழந்து நிர்கதியாக நிற்கிறோம். இந்த பேரிடர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாநில அரசு பாதிப்புகளை ஈடுசெய்ய ரூ. 15 ஆயிரம் கோடி கேட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி எதுவும் பேசாமல் யானைப் பசிக்கு சோளப் பொறி போடுவது போல நிவாரணத் தொகை கொடுத்துவிட்டு தற்போது கடிதம் அனுப்புகிறார்.
இங்குள்ள விவசாயிகளின் நிலையைப் பற்றி மத்திய அமைச்சர்கள், மத்திய குழுக்கள், பா.ஜ.க நிர்வாகிகள் நேரில் வந்து பார்த்த பிறகும்கூட, வாழ்விழந்து நிற்கும் விவசாயிகளை பார்க்க பிரதமர் வரவில்லை. ஆனால் விரைவில் தேர்தல் வர உள்ளது என்பதை நினைவூட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் சாதனை கடிதம் எழுதுகிறார். இந்தியா முழுவதும் சுமார் 10 கோடிக்கு மேல் கடிதம் அனுப்பி உள்ளனர். ஒரு கடிதத்திற்கு தபால் செலவு மட்டும் சுமார் ரூ.40. இந்த கடிதங்களுக்கு செய்யப்படும் செலவில் சிறு பகுதியை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக கொடுத்திருந்தால் தற்போது வரும் கடிதத்தை மன நிறைவோடு படிப்பார்கள். ஆனால் அதை செய்யவில்லை என்றனர்.