கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதற்கிடையே, இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
அதே நேரம், வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாகப் பொறுப்புகளில் மாற்றம் செய்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நடவடிக்கை எடுத்திருந்தார். அதன்படி, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்த பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டிருந்தார். மேலும், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டிருந்தார். அதே போல், பல்வேறு மாநிலங்களில் புதிய பொறுப்பாளர்களை காங்கிரஸ் நியமித்திருந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, சசிகாந்த் செந்தில் தலைமையில் செயல் திட்டக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. அதன்படி, தேர்தல் செயல்திட்ட குழு துணைத் தலைவர்களாக கோகுல் புடைய்ல், நவீன் சர்மா, வருண் சந்தோஷ், அரவிந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்தலை ஒட்டிய தகவல் தொடர்பு பணிக்குழுவின் தலைவராக வைபவ் வாலியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.