இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துவருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை ஏற்படும் என தொடர்ந்து எச்சரிக்கப்படுகிறது. செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் கரோனா மூன்றாவது அலை உச்சத்தைத் தொடலாம் என அண்மையில் மத்திய அரசுக்கு கரோனா தொடர்பாக ஆலோசனை கூறும் குழுவின் விஞ்ஞானி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), கரோனா குறித்து ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தற்போதைய தரவுகளின்படி, இந்தியாவில் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில், தினசரி கரோனா பாதிப்பு கிட்டத்தட்ட 10 ஆயிரமாக குறையும். இருப்பினும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் கரோனா பாதிப்பு உயரும். ஒரு மாதத்திற்குப் பிறகு கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும்" என கணிக்கப்பட்டுள்ளது.
கரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கையில், இரண்டாவது அலையில் பதிவானதைவிட இரண்டு மடங்கு அல்லது 1.7 மடங்கு அதிகமாக கரோனா பாதிப்புகள் பதிவாகும் என தெரிவித்துள்ள எஸ்.பி.ஐ அறிக்கை, கரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே பாதுகாப்பு எனவும் கூறியுள்ளது.
மேலும், கரோனா தடுப்பூசி குறித்து அந்த அறிக்கையில், ராஜஸ்தான், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், கேரளா, உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில், 60 வயதிற்கும் மேற்பட்ட மக்கள் தொகையில், அதிக சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மாநிலங்களில் கிராமப்புறங்களில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. தமிழ்நாடு, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், அசாம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 45 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு கரோனா தடுப்பூசி குறைந்த விகிதத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் தடுப்பூசி செலுத்துவது வேகப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.