நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17- ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தொழிலாளர் சட்டத்திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் முத்தலாக் தடை சட்டத்தில் திருத்தங்கள் செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் முத்தலாக் தடை சட்டத்தை உருவாக்கி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முன்பு இருந்த அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இருப்பினும் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறிய போதிலும், மாநிலங்களவையில் பாஜகவிற்கு போதிய பலம் இல்லாத காரணத்தால் மசோதா நிறைவேறாமல் போனது. அதன் காரணமாக முத்தலாக் அவசர சட்டத்தை பிறப்பித்து குடியரசுத்தலைவர் ஒப்புதல் உடன் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.
இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளதால், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா கட்டாயம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜகவிற்கு தற்போது உறுப்பினர்கள் அதிகரித்துள்ளனர். இதன் காரணமாக எளிதாக மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். முத்தலாக் தடை சட்ட மசோதாவில் முஸ்லீம் பெண்களுக்கு தலாக் கூறும் கணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தணடனை, அபராதம், குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் அடுத்த மாதம் (ஜூலை) 3- ஆம் தேதி முதல் மேலும் 6 மாதங்களுக்கு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருக்கும். இதன் காரணமாக ஆறு மாதத்திற்கு பிறகே தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.