காதலுக்கும் ஜிகாத்துக்கும் முடிச்சுப்போட்டு அரசியல் செய்யாதீர்கள் என மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜஹான் கூறியுள்ளார்.
திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. மேலும், அவ்வாறு திருமணத்தின்போது மதம் மாறுவது செல்லாது எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் திருமணத்தைப் பயன்படுத்தி இந்துக்களை மதம் மாற்றம் செய்வது லவ் ஜிகாத் எனவும், இந்த லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தன.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜஹான், "காதல் உணர்வுக்கும் ஜிகாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. காதல் தனிநபரின் உரிமை. யார் யார் மீது அன்பு செலுத்த வேண்டுமென்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. காதலுக்கும் ஜிகாத்துக்கும் முடிச்சுப்போட்டு அரசியல் செய்யக்கூடாது. தேர்தல் வேளையில் இதுபோன்ற விஷயங்களை முன்னிறுத்து மத அரசியல் செய்யக்கூடாது. மதத்தை அரசியல் ஆயுதமாக மாற்றாதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.