அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவது பற்றி அரசு ஒரு போதும் பேசவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட ஆராய்ச்சி நிலைகளை எட்டியுள்ள நிலையில், விரைவில் இவை உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவது பற்றி அரசு ஒரு போதும் பேசவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் 'இந்திய மக்கள் அனைவருக்கும் எப்போது கரோனா தடுப்பூசி போடப்படும்?' என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "கரோனா தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம், வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதுதான். வைரஸ் பரவும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்து, பரவல் சங்கிலியை உடைக்க முடிந்தால், ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.