பள்ளி மாணவியின் சாதியைக் காரணம்காட்டி, பின் பெஞ்சுக்கு அனுப்பிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன.

உத்தரப்பிரதேசம் மாநிலம் முஷாப்பர்நகரில் உள்ள பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறாள் 13 வயது சிறுமி. சக மாணவிகளுடன் முதல் வரிசையில் இருந்த அந்த மாணவியை எழுப்பிய ஆசிரியர், உன் சாதி என்ன? என சக மாணவ, மாணவிகளின் மத்தியில் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி தயங்கியபடியே வால்மீகி என பதிலளித்துள்ளார். வால்மீகி சமுதாயம் தாழ்த்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வரக்கூடியது. மாணவியின் சாதியை அறிந்துகொண்ட ஆசிரியர், அவரை கடைசி பெஞ்சுக்கு அனுப்பி அமரவைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதையறிந்து ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர் பள்ளியை முற்றுகையிட்டு, சம்மந்தப்பட்ட ஆசிரியரைக் கைதுசெய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பள்ளியின் தலைமையாசிரியர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மாணவி சக மாணவியுடன் பேசியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கியுள்ளார்.
இருப்பினும், சிறுமியின் பெற்றோர் அதை ஏற்காத நிலையில், காவல்துறையினர் சம்மந்தப்பட்ட ஆசிரியரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளைக் களைய வேண்டிய கல்விச்சூழலே, அதை வளர்க்கும் கூடாரமாக மாறிவருவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.