என்எல்சி இந்தியா நிறுவனம் 2400 மெகாவாட் திறனுடைய (3x800 மெகாவாட் - முதல் நிலை) நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையத்தினை அமைப்பதற்கான ஒப்பந்தத்தினை, பாரத் மிகுமின் நிறுவனத்திற்கு உலகளாவிய போட்டி வழித்தடத்தின் கீழ் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒடிசா மாநிலத்தில் ஜார்சுகுடா மாவட்டத்தில், க்ரீன் ஃபீல்டு அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைப்பதற்கு வழங்கியுள்ளது.
இபிசி ஒப்பந்த நோக்கத்தில் 3x800 மெகாவாட் திறனுடைய முதல் நிலைக்கான கொதிகலன்கள், டர்பைன், ஜெனரேட்டர்கள் மற்றும் ஆலைகளின் இதர உப இயந்திரங்கள், கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களைப் பிரித்தெடுப்பதற்கான எப்ஜிடி (FGD) மற்றும் எஸ்சிஆர் (SCR) போன்ற உபகரணங்களை பொறியியல், உற்பத்தி, வழங்கல் மற்றும் நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
உற்பத்தி செய்யப்படும் 2400 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு, ஒடிசா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கான மின் கொள்முதல் ஒப்பந்தம் (PPA) ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனல் மின் திட்டத்திற்கான நிலக்கரி இணைப்பு, ஒடிசாவின் ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள என்எல்சிஐஎல்-இன், ஆண்டுக்கு 20 மில்லியன் டன் (MTPA) உற்பத்தி திறனுடைய தலபிரா II & III திறந்த வெளி சுரங்கங்களில் (OCP) இருந்து கிடைக்கும்.
இந்த அனல் மின் திட்டத்திற்குத் தேவையான நீர் ஹிராகுட் நீர்த்தேக்கத்திலிருந்து கிடைக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநிலங்களுக்கு இடையிலான மின் கடத்தி (ISTS) மற்றும் மாநிலத்திற்குள்ளான மின் பகிர்மான (STU) மின் தடங்களின் வாயிலாக வெளியேற்றப்படும்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்வதற்காக கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்களைப் பிரித்தெடுப்பதற்கான எப்ஜிடி (FGD) மற்றும் எஸ்சிஆர் (SCR) போன்ற சமீபத்திய மாசுக் கட்டுப்பாட்டு உபகரணங்களுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். உயிரி கழிவு (பயோ மாஸ்) எரிபொருள் கையாளும் அமைப்புகளுடன், மத்திய மின் அமைச்சக (MoP) வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக உயிரி கழிவினை நிலக்கரியோடு இணைத்து எரிப்பதற்கு ஏற்றவாறு கொதிகலன்கள் வடிவமைக்கப்படும்.
திட்டத்தின் முதல் அலகு, 2028-29 நிதியாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலக்கரிச் சுரங்கத்தின் அருகிலேயே அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையம் என்பதால், மாறுபடும் செலவு (variable cost) சிக்கனத்தில், மற்ற மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த மின் நிலையம் போட்டியாக இருக்கும் என்பதோடு, என்எல்சி இந்தியா, அதன் பயனாளிகளுக்குக் குறைந்த விலை மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் என என்எல்சி மக்கள் தொடர்புத் துறை செயல் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.