மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் சம்பவம் நடந்த அடுத்த நாளே கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சூழலில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதே சமயத்தில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ, சந்தீப் கோஷ் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது, மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வாங்குவதில் மருத்துவமனை முதல்வராக இருந்த போது சந்தீப் கோஷ் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததன் பேரில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கை நடத்திய காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டலையும் சி.பி.ஐ கைது செய்து விசாரணை நடத்தினர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவர் பிரதான குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றத்திற்கான தண்டனை வரும் திங்கட்கிழமை 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் சஞ்சய் ராய் மட்டும் குற்றவாளி அல்ல என பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தாய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “சஞ்சய் குற்றவாளி என்பது உயிரியல் சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் விசாரணைகளின் போது அவர் அமைதியாக இருந்தார் என்பதும் என் மகளை சித்திரவதை செய்து கொன்றதில் அவருக்கு பங்கு இருப்பதை நிரூபித்தது. ஆனால், இந்த வழக்கில் அவர் தனி ஆள் இல்லை. மற்றவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனவே, நீதி வழங்கப்படவில்லை. வழக்கு இன்னும் முடிவடையவில்லை. நானும் எனது கணவரும் எங்கள் வாழ்க்கையின் கடைசி நாள் வரை நீதிக்கான போராட்டத்தைத் தொடருவோம். இந்த வழக்கு இன்னும் முழுமையடையவில்லை. எங்கள் மகளைக் கொன்றதில் தொடர்புடைய மற்றவர்கள் தண்டிக்கப்பட்ட பின்னரே இது முடிவடையும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம். அந்த நாள் வரை, நாங்கள் தூங்கவே முடியாது. இப்போது நாங்கள் விரும்புவது அதுதான்” என்று தெரிவித்துள்ளார்.