தனது போதகர் தந்தை அடக்கம் செய்ய முடியவில்லை என்று கூறி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், சிந்தவாடா கிராமத்தில் இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் வாய்வழியாக ஒதுக்கப்பட்ட கல்லறைகள் உள்ளன. இந்த கிராமத்தின் கல்லறையில், இடைநிலை சாதியைச் சேர்ந்தவர்கள அடக்கம் செய்வதற்கும், பழங்குடியின மக்களை அடக்கம் செய்வதற்கும், கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் தனி தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அந்த கிராமத்தில் வசித்த கிறிஸ்துவ மத போதகர் ஒருவர் முதுமையால் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகனான ரமேஷ் பாகேல் என்பவரும், குடும்பத்தினரும், இறுதிச்சடங்குகளை நடத்த விரும்பினர். மேலும், கிறிஸ்துவ நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கிறிஸ்துவ மத முறைப்படி அடக்கம் செய்ய விரும்பினர். இதை கேள்விப்பட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவ முறைப்படி இறந்தவரின் உடலை கிராமத்தில் அடக்கம் செய்தால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அவர்களை மிரட்டியுள்ளனர்.
கிராம மக்கள் வன்முறையில் ஈடுபட்டபோது, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் கிராமத்திற்கு வந்து, உடலை கிராமத்திற்கு வெளியே கொண்டு செல்ல குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ரமேஷ் பாகேல் சத்தீஸ்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், கிறிஸ்துவர்களுக்கு தனி மயானம் இல்லை என கிராம பஞ்சாயத்து அளித்த சான்றிதழை ஏற்று, அந்த உடலை கிராமத்தில் அடக்கம் செய்ய அனுமது மறுத்தது.
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ரமேஷ் பாகேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த விசாரணை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘உயர் நீதிமன்றம் கூட ஒரு விசித்திரமான உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசு என்ன செய்கிறது?’ என்று அதிருப்தி தெரிவித்து இந்த வழக்கை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.