'Modi @ 20: Dreams Meet Delivery' என்ற புத்தகக் கருத்தரங்க நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, " கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் நாட்டு மக்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளார்கள். வெளிநாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய தலைசிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11 மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் படிக்க புதிய கல்விக் கொள்கை வழி வகுத்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.