பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுக்காத மாணவ மாணவிகளும் இனி மருத்துவர் ஆகலாம் எனத் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த தேர்வுக்கு தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய கல்வி முறையில் உயிரியல் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள்தான் மருத்துவ படிப்பை படிக்க முடியும் என்ற விதி இருந்தது. இந்த நிலையில், இந்த விதியை மாற்றும் விதமாக இனிமேல், உயிரியல் பாடப்பிரிவை எடுக்காத மாணவர்கள் கூட மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வை எழுதலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைப் படிக்காமல் வேறு பாடங்களைப் படித்தவர்கள் மேல்நிலைப்பள்ளி கல்வியை முடித்த பின்னர் அவர்கள் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு எழுதும் தகுதி பெற்றவர்கள் ஆவர். அதாவது, உயிரியல் பாடத்தை தேர்வு செய்யாத மாணவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவம் அல்லது பிடிஎஸ் (பல் சார்ந்த படிப்பு) படிப்பில் சேர முடியும். இந்த மாணவர்கள் தங்களது பாடங்களைச் சேர்த்து கூடுதல் பாடமாக உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், இந்த அறிவிப்பிற்கு முன்னர் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கும் இந்த புதிய விதி செல்லத்தக்கது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த அறிவிப்புகள் அனைத்தும் பள்ளிக் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் அறிவிப்புகளாக இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.