
தமிழகம், டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தும், சிபிஎஸ்இ 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்தும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் நலன் கருதி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வும் ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் இன்று (15/04/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியத் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள், சுற்றுலாத் தலங்கள், நினைவிடம், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை மே மாதம் 15- ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.