விமானத்தில் சரக்குகளை ஏற்றும் தொழிலாளி ஒருவர், கார்கோ அறையிலே அசந்துவிட்டதால் அபுதாபியில் வரை சென்று திரும்பியது பலரையும் வியக்க வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அபுதாபி சென்ற இண்டிகோ ஏர்பஸ் விமானத்தில் தான் இந்த வினோதம் நிகழ்ந்துள்ளது. அதிகாலை 02.00 மணியளவில் பயணிகளின் உடைமைகள் உள்ளிட்ட சரக்குகளை கார்கோ வரையில் ஏற்றிய அந்த தொழிலாளி, அசதியில் அங்கேயே உறங்கிவிட்டார்.
விமானம் வானில் பறந்த பிறகே நிலைமை அவருக்கு தெரிய வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர், விமானத்திலேயே தவித்துள்ளார். சில மணி நேரத்திற்கு பிறகு விமானம் அபுதாபியில் தரையிறங்கியதும், உடைமைகள் வைக்கப்பட்டுள்ள அறைத் திறக்கப்பட்டுள்ளது. உள்ளே ஒருவர் இருப்பதைப் பார்த்து அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வேறு வழியில்லாமல் தனது நிலைமையை அதிகாரிகளிடம் தொழிலாளி எடுத்துக் கூறியதை அடுத்து, உரிய அனுமதிப் பெற்று அந்த தொழிலாளி மீண்டும் அதே விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.