மகப்பேறு காலத்தில் மனைவிக்குப் பிறக்கும் குழந்தையைப் பராமரிக்க கணவருக்கு 15 நாட்கள் விடுப்பு வழங்க, ஹரியான அரசு முடிவு செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் நிலவிவரும் வேலைவாய்ப்பு, அரசுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசுத்துறை அதிகாரிகளுடன் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, பிரசவ காலத்தில் மனைவிக்கு பிறக்கும் குழந்தை மற்றும் மனைவியைப் பராமரிக்க கணவருக்கு 15 நாட்கள் விடுப்பு தருவதற்கான முடிவு குறித்து பரிசீலிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட அரசுத்தரப்பு இதை நடைமுறைப்படுத்துவதற்காக உத்தரவாதத்தை அளித்தது. அதன்படி, அரசுத்துறையில் பணிபுரியும் ஆண்களுக்கு இந்த விடுப்பு முறையானது செல்லுபடியாகும்.
பிரசவ காலத்தில் குழந்தை பராமரிப்பிற்காக பெண்களுக்கு ஆறு மாதங்கள் விடுப்பு வழங்கும் முறை நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆண்களுக்கும் 15 நாட்கள் விடுப்பு அளிக்கும் ஹரியானா அரசின் இந்த திட்டம் பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. அதேபோல், ஹரியானா காவல்துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 11%ல் இருந்து 20%ஆக உயர்த்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.