
உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டிருந்தாக தொடரப்பட்ட வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்தானடு நவம்பர் மாதம் உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்வதற்காக வந்த போது ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இந்த மோதலில் வாகனங்கள் எரிப்பு போன்ற பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் அங்கு 4 பேர் பலியாகினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பல் மசூதி சர்ச்சைக்கு மத்தியில், சம்பல் விவகாரம் போன்ற உண்மைகள் வெளிப்படும்போது, சிலர் தங்கள் முகத்தைக் காட்ட முடியாமல் போவார்கள் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “சம்பல் உண்மைதான். நான் யோகி, நான் ஒவ்வொரு பிரிவையும் மதத்தையும் மதிக்கிறேன். ஆனால், யாராவது ஒரு இடத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து ஒருவரின் நம்பிக்கையை அழித்துவிட்டால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சம்பலில், 69 புனித யாத்திரை தளங்கள் இருந்தன. ஆனால், இப்போது 18 இடங்களை மட்டுமே எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. சம்பலில் உள்ள சிவன் கோயிலில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேகம் நடந்தது.
சமீபத்தில் இந்தியாவின் குடியரசுத் தினத்தன்று, தனது டிஎன்ஏவை பரிசோதனை செய்தால் அது இந்தியாவுடையதாக இருக்கும் என்று இந்தோனிசியா அதிபர் கூறினார். இந்தியாவின் வளங்களைப் பயன்படுத்துபவர்கள் முதலில் டிஎன்ஏ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு படையெடுப்பாளர்களைப் புகழ்வதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் சம்பல் போன்ற உண்மைகள் வெளிவரும் போது, அவர்களில் யாரும் எங்கும் தங்கள் முகத்தைக் காட்ட முடியாது.
சம்பலில் உள்ள சிற்பங்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானவை என்று கூறப்படுகிறது. அதில், கடவுள் விஷ்ணுவின் எதிர்கால அவதாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால், இஸ்லாம் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றியது. இஸ்லாம் தோன்றுவதற்கு குறைந்தது 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒன்றைப் பற்றி நான் பேசுகிறேன். இந்த விஷயங்களுக்கான சான்றுகள் பல நூற்றாண்டுகளாக உள்ளன. 1,526 ஆண்டு, சம்பலில் உள்ள கடவுள் விஷ்ணுவின் கோயில் இடிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1,528ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள ராமர் கோயில் இடிக்கப்பட்டது” என்று கூறினார்.