
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரின் போது, முதல்வர் நிதிஷ் குமாருக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தொரின் போது, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ச்சி ஊர்மிளா தாக்கூர் மாநில அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். பல கிராமங்களில் பெண்கள் கல்வியை இழப்பதாகவும், பள்ளிக்குச் செல்வதற்காக 5 கி.மீ வரை நடக்க வேண்டிய அவலம் ஏற்படுவதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், “பெண்கள் கல்விக்காக நாங்கள் என்ன செய்தோம் என்று உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் ஆட்சிக்கு வரும் வரை பீகாரில் கிராமப் பெண்கள் அரிதாகவே பள்ளிகளுக்குச் சென்றார்கள். நாங்கள் பெண்களுக்கு என்ன செய்தோம் என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் பெண்களாக இருக்கலாம், ஆனால் உங்கள் பங்களிப்பு என்ன?. உங்கள் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மூழ்கத் தொடங்கும் போது அவரது மனைவியை முதல்வர் பதவியில் அமர்த்தினார் ” என்று பேசினார். இதனையடுத்து, முதல்வர் நிதிஷ் குமார் பெண்களை அவமதித்ததாகக் கூறி லாலு பிரசாத் யாதவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி உள்பட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், ராப்ரி தேவி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நிதிஷ் குமார் ‘பாங்’ சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருகிறார். நான் உள்பட பெண்களை அவர் அவமதித்துவிட்டார். நாங்கள் ஆட்சியில் இருந்த போது என்ன மாதிரியான வேலை செய்தோம் என்பதை அவர் கணிவுடன் பார்க்க வேண்டும். அவரை சுற்றியிருக்கும் மக்களைப் போல் தான் அவர் பேசுகிறார். அவருடைய சொந்த கட்சியினரும், சில பா.ஜ.க தலைவரும் இது போன்ற விஷயங்களைச் சொல்ல சொல்கிறார்கள். நிதிஷ் குமார் முதன்முதலாக முதல்வரான போது 2005ஆம் ஆண்டுக்கு முன்பு பெண்கள் ஆடைகள் கூட அணியவில்லை என்று நிதிஷ் குமார் நம்புகிறார். அவர் 2005இல் பிறந்தது போல் பேசுகிறார். அவருடைய பிரதமர் நரேந்திர மோடி 2014இல் தான் இந்த உலகிற்கு வந்தது போல் நடிக்கிறார். கடந்த காலத்தில் பெண்கள் ஆடை அணியவில்லை என்றால் என்ன அர்த்தம் என்பதை இரு தலைவர்களும் நமக்குச் சொல்ல வேண்டும்” என்று கடுமையாக சாடினார்.