கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று (மே 10, 2023) காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் கோலோச்சினாலும் தென்மாநிலங்களில் பாஜகவால் வளர முடியவில்லை. இருப்பினும், தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவை மட்டும் பாஜக கையில் வைத்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு தேர்தல் அறிவிக்கப்படும் சில மாதங்களுக்கு முன்னரே ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. இது ஒருபுறம் இருக்க, பாஜகவிடம் இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்தது.
இருகட்சிகளும் மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளி வீசியது. குறிப்பாக, பொதுமக்களுக்கு இலவச வாக்குறுதிகளைக் கொடுப்பதை எதிர்த்துப் பேசி வந்த பாஜக, கர்நாடகா தேர்தலிலும் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இப்படியாக கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க அமித்ஷா, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, சோனியா காந்தி என இரு கட்சிகளின் பல முக்கியத் தலைவர்கள் சாலை பிரச்சாரங்களும் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக ராகுல் காந்தியின் பிரச்சாரம் பெருமளவில் மக்களைக் கவர்ந்துள்ளது. இப்படியாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகளின்படி கடந்த திங்கள் மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸின் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்தார். மேலும், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “பிரதமர் மோடி கடந்த முறை சொன்னதை நான் இன்று செயல்படுத்துகிறேன். கேஸ் சிலிண்டர் விலை ரூ. 445 இல் இருந்து தற்போது ரூ. 1200 ஆக உள்ளது. அதனால், பிரதமரின் கோரிக்கையை ஏற்று வாக்களியுங்கள். சிலிண்டர்களுக்கு மாலை அணிவியுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை இன்று காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘கன்னடர்களே, வாக்களிக்கச் செல்லும் முன் இந்த சடங்கைச் செய்ய மறந்துவிடாதீர்கள்’ எனப் பதிவிட்டுள்ளது. அதேபோல், அந்த வீடியோவில், பிரதமர் மோடியின் பழைய பேச்சை இணைத்துள்ளது. அந்த ஆடியோவில், ‘நீங்கள் வாக்களிக்கச் செல்லும் போது கேஸ் சிலிண்டரை வணங்கிவிட்டு செல்லுங்கள்’ என்று உள்ளது.
இந்த நிலையில் இன்று வாக்கு செலுத்தச் செல்லும் முன்பு அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளதை போல் பலரும் சிலிண்டருக்கு தீப ஆராதனை காட்டி வணங்கிவிட்டு தங்களது வாக்கினை செலுத்தச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் இன்று காலை சரியாக 7.15 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், மகளிருக்கான உரிமை, இளைஞருக்கான வேலைவாய்ப்பு, ஏழைகளுக்கான வாழ்க்கைத்தரம் உயர்வு உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளைப் பதிவிட்டு, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்த பதிவை #CongressWinning150 என்ற ஹேஷ்டேக்கோடு பதிவிட்டிருந்த நிலையில் தற்போது அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரண்ட் செய்யப்பட்டும் வருகிறது.