கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன் நிபா வைரஸுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பலியானான். கேரளா ஏற்கனவே கரோனா தொற்று பரவலில் சிக்கித் தவிக்கும் நிலையில், நிபா வைரஸால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பலியான சிறுவனின் வீட்டைச் சுற்றி 3 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 129 சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 251 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பலியான சிறுவனின் வீடு இருந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 11 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் மாதிரிகளைப் பரிசோதிக்க கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில், புனே வைராலஜி நிறுவனத்தின் நிபுணர்களால் சிறப்பு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, புனே வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட 8 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில், அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும், நிபா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சிறுவனின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில், இன்றுமுதல் (07.09.2021) வீடு வீடாகச் சென்று கண்காணிக்கும் பணி நடைபெறும் எனவும் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.