
பாகிஸ்தானில் உள்ள காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீது பலுசிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் சமீப காலமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற விரைவு ரயிலை நேற்று (11.03.2025) கிளர்ச்சிப்படையினர் கடத்தினர். அதாவது பலுசிஸ்தானின் மாக் பகுதியில் பெஷாவர் - குவெட்டா இடையே இயக்கப்படும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆயுதமேந்திய நபர்களால் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டது. 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸில் ரயிலில் பயணிகள், எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ஊழியர்கள் என 450 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து இந்த ரயிலை கிளர்ச்சிப்படையினர் கடத்தப்பட்ட காட்சிகள் வெளியாகின. இந்த ரயிலில் இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 27 பேரைச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ரயிலில் இருந்த 400க்கும் மேற்பட்டோரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 150க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
இந்நிலையில் கடத்தப்பட்ட ரயிலில் இருந்த பயணிகளை விடுப்பது தொடர்பாகப் பாகிஸ்தான் அரசுக்கு பலூச் கிளர்ச்சியாளர்கள் கெடு விதித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக பாகிஸ்தான் சிறையில் உள்ள பலுசிஸ்தான் கைதிகளை விடுவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த 24 மணி நேரம் கழித்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 பேரைக் கொல்வோம். எங்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பணயக்கைதிகளை பலுசிஸ்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளனர்.