
வடமாநிலங்களில் இந்து சமூக மக்களால் வெகு விமர்சையாக ஹோலி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, ருவர் மீது ஒருவர் எந்தவித வேறுபாடுமின்றி வண்ணப் பொடிகளைப் பூசிக் கொண்டாடுவர். இந்த பண்டிகை வருகிற இந்தாண்டு மார்ச் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர் கடந்த சில நாட்களாக மசூதிக்குச் சென்று நோன்பு திறந்து வருகின்றனர். ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் ஒத்துப்போகிறது.
இதனால், இந்து மக்களை ஹோலி பண்டிகையைக் கொண்டாட இஸ்லாமியர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் கோபப்படக்கூடாது என்றும் அவர்களுக்கு ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் பீகார் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிபூசன் தாக்கூர் பேசி சர்ச்சையைக் கிளப்பினார். இவரின் சர்ச்சை பேச்சுக்கு, மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.
இதனை தொடர்ந்து, ஹோலி பண்டிகையை தொழுகை நேரத்தின் போது இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ஹோலி கொண்டாடுபவர்கள் தொழுகையின் போது, மசூதிகளில் இருந்து இரண்டு மணி நேரம் குறிப்பிட்ட தூரத்தில் தள்ளி இருக்க வேண்டும் என்றும் பீகார் மாநிலத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பெண் மேயர் அஞ்சும் அரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையின் வெள்ளிக்கிழமை தொழுகையுடன், ஹோலி பண்டிகையும் இணைந்திருப்பதால், பீகார் மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பீகார் மாநிலத்தை தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் சம்பல் உள்ளிட்ட 10 மசூதிகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச காவல்துறை மூத்த அதிகாரி அனுஜ் குமார் சவுத்ரி, ‘மக்கள் ஹோலி கொண்டாடும்போது, முஸ்லிம்கள் தங்கள் மீது வண்ணங்கள் விழ விரும்பவில்லை என்றால், அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற நேரடி செய்தியை நாங்கள் வழங்கியுள்ளோம்’ என்று தெரிவித்தார். இவரது கருத்துக்கள் சர்ச்சையானது. காவல்துறை அதிகாரி அனுஜ் குமார் சவுத்ரியின் கருத்துக்களை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஆதரித்து பேசினார்.
இந்த நிலையில், சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதி உள்ளிட்ட 10 மசூதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அந்த மசூதிகளை மார்ச் 14ஆம் தேதி பிளாஸ்டிக் தாள்கள் மற்றும் தார்பாய்களால் மூட போலீஸ் முடிவு செய்துள்ளது. இரண்டு மத நிகழ்வுகளுக்கும் சுமூகமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.