தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் 1 கோடி மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அதே போல் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 150- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கொச்சின் விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்தை நள்ளிரவு 12.00 மணி வரை மூடப்படும் என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் விமான சேவை முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மேலும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் மிக அதிகன மழைக்கும், வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ராணுவ உதவியை கேரள அரசு கோரியுள்ளது.