



புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளராக இருந்த அமைச்சர் கே.என். நேருவின் ஆதரவாளரான ஆ. செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகு அந்த பதவிக்குக் கட்சியின் சீனியர்கள், இளைஞர்கள் எனப் பலரும் எதிர்பார்த்து தலைமையை அணுகி இருந்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர் நேரு, செந்தில் மகனுக்கு மாநகரச் செயலாளர் கிடைக்க அனைவரும் பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதற்குக் கட்சி நிர்வாகிகள் சரி என்றாலும் இந்தப் பதவியை எதிர்பார்த்திருந்த பலரும் தனித்தனியாக முயற்சி செய்து வந்தனர்.
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவின் ஆதரவாளரான வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஸ் மாநகர பொறுப்பு செயலாளராக நியமனம் செய்வதாக திமுக மாநில பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (12.03.2025) திலகர் திடலில் நடத்துவதாக இருந்த திமுக பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒரு தனியார் மண்டபத்தில் அரங்க கூட்டமாக நடத்தப்பட்டது. வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் அரங்க கூட்டம் தொடங்கியது. அப்போது புதிய மாநகரப் பொறுப்பாளர் ராஜேசும் கலந்து கொண்ட நிலையில் அங்கிருந்த மாநகர வட்டச் செயலாளர்கள் பலரும் எழுந்து புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது என்று கொந்தளித்து மைக்கை நிறுத்திச் சலசலப்பில் ஈடுபட்டனர்.
இதனால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த சலசலப்பில் ஈடுபட்டவர்கள் திடீரென மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அதே சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்திற்கு வந்த வட்டச் செயலாளர்கள் மற்றும் மாநகர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனையடுத்து மாவட்ட திமுக அலுவலகம் பூட்டப்பட்டது. இதனால் மேலும் கொதிப்படைந்த வட்டச் செயலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் நடப்பதை அறிந்த திமுகவினர் மேலும் அங்குக் குவிந்தனர். இவர்களுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.