மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் நேற்று தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நேற்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் அகமத்நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "நாடு பாதுகாப்பாக இருந்தால் தான் அதன் எதிர்காலம் வளமாக இருக்கும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என கூறுபவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளது. பிரிவினைவாத கொள்கையில் இருந்து பிறந்த காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்? 10 ஆண்டுகால மன்மோகன் சிங்கின் ஆட்சியில் இந்தியா வலிமையற்ற ஒரு நாடாக இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை. கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் உறுதியான, வலிமையான ஆட்சி இருந்து வருவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவை சூப்பர் பவர் நாடாக உலக நாடுகள் பார்க்கின்றன" என பேசினார்.