மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாம்பழங்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சிலிகுரியில் மாம்பழ கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்கத்தின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 55 விவசாயிகள் மாம்பழ திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்த கண்காட்சியில் அல்போன்சா, லாங்க்ரா, அம்ரபாலி, சூர்யாபுரி, ராணி பசந்த், லக்ஷ்மன் போக், ஃபஜ்லி, பிரா, சிந்து, ஹிம்சாகர், கோஹிதூர் மற்றும் பிற வகைகள் மாம்பழங்கள் என 262க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் உலகின் விலை உயர்ந்த மாம்பழமான மியாசாகி கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த மாம்பழம் சர்வதேச சந்தையில் கிலோ 2 லட்சத்து 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் மியாசாகி மாம்பழங்களை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் ஆகியோருக்கு மேற்கு வங்க மாநிலத்தில் விளைந்த மாம்பழங்களை அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.