இந்தியாவில் தற்போது, ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை, வேறொரு மாநிலத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் வரைதான் வைத்துக்கொள்ள முடியும். அதற்கு மேல் அந்த வாகனத்தை வேறு மாநிலத்தில் வைத்துக்கொள்ள, அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் மறுபதிவு செய்ய வேண்டும்.
இதனால் ஒரு நபர், வேலை உட்பட காரணங்களால் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் குடியேறினால், அவர்கள் தங்களது வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டிய நிலை நீடித்தது. இந்நிலையில், இதற்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு 'பாரத் சீரிஸ்' என்ற வாகனப் பதிவு எண் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் பதிவு செய்யப்படும் வாகனங்களை மறுபதிவின்றி, இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் பயன்படுத்தலாம். மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும், குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.