Skip to main content

"புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்"-சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

Published on 15/08/2022 | Edited on 15/08/2022

 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை, காந்தி சிலை முன்பு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

 

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதனையடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

விழாவில் சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, " புதுச்சேரி, வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ 7.10 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். காமராஜர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்பிற்கு கல்வி உதவித்தொகையாக ரூ 19.40 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழகத்திலிருந்து 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ரூ.425 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படும்" என தெரிவித்தார்.

 

தொடர் விடுமுறை காரணமாக புதுச்சேரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் இந்த வண்ணமயமான சுதந்திர தின விழாவை கண்டுகளித்தனர். இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்