Skip to main content

எழுந்து அடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்; சென்செக்ஸ் 80 புள்ளிகள் வீழ்ச்சி! இன்று எப்படி இருக்கும்?

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

Rising Indian Stock Exchanges; Sensex down 80 points! How is it today?


யு.எஸ். மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் இருந்தபோதும், முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை அதிகளவில் விற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் வியாழனன்று (ஜன.7) எழுச்சியுடன் துவங்கி, லேசான வீழ்ச்சியுடன் முடிவடைந்தது.


தேசிய பங்குச்சந்தையான நிப்டி வியாழனன்று காலை 14,253.25 புள்ளிகளில் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியது. அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாண தேர்தலில் ஜோ பைடன் தரப்பு வெற்றிபெற்றது. இந்த வெற்றி, பங்குச்சந்தைகளிலும் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் இருந்தது. நிப்டி அதிகபட்சமாக 14,256 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 14,123 புள்ளிகளுக்கும் சென்றதுடன், இறுதியாக 14,137 புள்ளிகளில் நிலைகொண்டது. இது முந்தைய வர்த்தக தினத்தைக் காட்டிலும் 8.90 புள்ளிகள் சரிவாகும்.


மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 48,524 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. ஒருகட்டத்தில், 48,558 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் குறியீட்டு எண், பின்னர் 48,037 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக நேர முடிவில் 48,093 புள்ளிகளாக இருந்தது. முந்தைய நாள் வர்த்தகத்தைவிட இது 80.74 புள்ளிகள் வீழ்ச்சியாகும். பிற்பகல், 2 மணிக்கு மேல் வர்த்தகம் லேசாகச் சரிவை நோக்கிச் சென்றது. இலாப நோக்கம் காரணமாக இந்திய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்கத் தொடங்கினர். இதனால் பங்குகளின் விலைகள் வெகுவாக சரியத் தொடங்கியது. 


எனினும், ஆட்டோமொபைல், நிதிச்சேவைகள், மீடியா, உலோகம், வங்கி, ரியல் எஸ்டேட் துறைகளின் பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டிருந்தன. எனர்ஜி, நுகர்பொருள், ஐடி துறை பங்குகள் சரிவடைந்தன.


இன்று ஜன.8 எப்படி இருக்கும்?


நிப்டியில் 14,256 புள்ளிகள் வரை உயர்ந்து பிறகும் எதிர்மறையாக வர்த்தகம் முடிந்திருப்பது நிச்சயமாக நல்ல அறிகுறி இல்லைதான். அதேநேரம் இன்ட்ராடே முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஓரளவு லாபம் கொடுத்திருக்கின்றன. 


ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் நிப்டியில் பட்டியலிடப்பட்டு உள்ள பங்குகளில் 1,198 பங்குகளின் விலைகள் கணிசமாக ஏறியிருக்கின்றன. 737 பங்குகள் சரிவைச் சந்தித்து உள்ளன. பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய இது ஒரு நேர்மறையான முடிவுதான் என்றும் சொல்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.


வெள்ளியன்று ஜன.8 சந்தைகளில் ஓரளவு ஏற்றம் ஏற்பட்டால், நிப்டி 14,221 முதல் 14,305 புள்ளிகளில் வரை வர்த்தகம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கி பங்குகள் நல்ல ஏற்றம் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால ஆதாயம் தரும் பங்குகள்:


ராம்கோ சிமெண்ட், ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட், பவர் கிரிட், அப்பல்லோ ஹாஸ்பிடல், ஏ.சி.சி., எக்ஸைடு பேட்டரி, ஓ.என்.ஜி.சி., இண்டஸ்டவர், பீ.பி.சி.எல், செயில் ஆகிய நிறுவன பங்குகள் குறுகிய கால ஆதாயம் அளிக்கக் கூடியவையாகக் கணிக்கப்பட்டு உள்ளது.


இன்று ரிசல்ட்:

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளை இன்று (ஜன.8) வெளியிடுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்