மின்சார கார்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டுமென்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
டெஸ்லாவின் மின்சார ரக கார்கள் எப்போது இந்தியாவிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுவதால், வரியைக் குறைக்க வேண்டும் என எலான் மஸ்க் கூறி வருகிறார். முற்றிலும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட காரை விற்பனை செய்ய அனுமதி வேண்டும் என்கிறது டெஸ்லா நிறுவனம்.
ஆனால், மத்திய அரசோ, மின்சார கார்களின் பாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவிலேயே காரை உருவாக்கி விற்பனை செய்யுங்கள் எனக் கூறி வருகிறது. அண்மையில் கூட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் தொழிற்சாலையை நிறுவும்படி, எலான் மஸ்கிற்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில், தற்போது வரி விதிப்பு முறையிலேயே முதலீடுகள் இந்தியாவை நோக்கி வருவதாகவும், அதனை மாற்ற வேண்டிய தேவைகள் இல்லை எனவும், மத்திய மறைமுக வரிகள் விதிப்பு வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குவது தொடர்பான, எந்தவொரு திட்டத்தையும் டெஸ்லா நிறுவனம் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் டெஸ்லா நிறுவனத்தின் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிய மாடல்களை அந்நிறுவனம் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.