உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடமான 2.77 ஏக்கர் அளவுள்ள நிலம் யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் மத்யஸ்தர்கள் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![ayodhya](http://image.nakkheeran.in/cdn/farfuture/L8k0RoUNJIhyVibsIP3nAG07ZiFgGy1kkaJtZzgQsu8/1552044000/sites/default/files/inline-images/bab-in_1.jpg)
இந்த வழக்கில் சர்ச்சைக்குள்ளான இடத்தை, வழக்கில் தொடர்புடைய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
பின்னர் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்வு காண மத்தியஸ்தர் குழு நியமிக்கலாம் என கடைசியாக நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில் தற்போது மத்தியஸ்தர் குழுவில் யார் யார் இருக்கின்றனர் என்ற தகவலை நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஒய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு அயோத்தியில் சமரசம் செய்யும் எனவும், அடுத்த ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கி 8 வாரங்களில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இடம் பெறுவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை தொடர்பான விவரங்கள் ஊடகங்களிடம் தெரிவிக்கப்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.