பீகார் மாநிலத்தில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் பாஜக, ஜனதா தளம், லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்தித்தனர். அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் பாஜக கட்சி மட்டும் 16 இடங்களையும், ஆளும் ஜனதா தள கட்சி 17 இடங்களையும், லோக் ஜன சக்தி கட்சி 6 இடங்களையும் கைப்பற்றியது. அதே போல் நாடு முழுவதும் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்தது. இதில் பாஜக தனித்து 303 இடங்களை கைப்பற்றியுள்ளதால் தனி பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசு அமைந்தது. இந்நிலையில் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் 57 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அமைச்சரவையில் 4 இடங்கள் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் பீகார் ஜனதா தள எம்பிக்கள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சரவையில் ஜனதா தளம் இடம் பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் நிதிஷ் குமார் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். அந்த அமைச்சரவையில் பாஜக இடம் பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்பார்த்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதனால் பீகார் மாநில பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் கவர்னர் லால்ஜி தாண்டன் நரேந்திர நாராயணன் யாதவ், சஞ்சய் ஜா, அசோக் குமார் சவுத்ரி, ராம்சேவக் சிங், ஷ்யாம் ரஜாக், நீரஜ் குமார், லட்சமேஷ்வர் ராய், விமா பாரதி ஆகிய 8 எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் நிதிஷ் குமார், பாஜக கட்சியை சேர்ந்த துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, சபாநாயகர் சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். இதனால் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. பாஜக மீது முதல்வர் நிதீஷ் குமாருக்கு என்ன வருத்தம் என்றால், பீகார் மாநிலத்தின் சிறிய கட்சியான லோக் ஜன சக்தி க்கு மத்திய அமைச்சரவில் இடம் அளித்துள்ளதே காரணமாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் ஜனதா தள கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பாரா? பிரதமர் நரேந்திர மோடி என்ற கேள்வி எழுந்துள்ளது.