மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய அரசுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நடைபெற்றுவருகிறது. மேற்கு வங்க தேர்தலுக்குப் பிந்தைய கலவரங்கள், அதனைத்தொடர்ந்து ஆளுநருக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையேயான மோதல், மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் இடமாற்றம் என நாளுக்குநாள் மோதல் முற்றிக்கொண்டேவருகிறது.
இந்தநிலையில், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துவரும் மம்தா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு ஹிம்ஸாகர், மால்டா, லட்சுமன்போக் ஆகிய மாம்பழ வகைகளை அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் மம்தா மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.
2011ஆம் ஆண்டு முதன்முதலாக முதல்வர் பதவியை ஏற்றதிலிருந்து, மேற்கு வங்க மாம்பழ சீசனின்போது பிரதமர் உள்ளிட்டோருக்கு மேற்கு வங்க மாம்பழங்களை அனுப்புவதை மம்தா பானர்ஜி வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.