அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரைச் செய்துள்ளார். புகாரின் பேரில் கலால் துறையில் 11 அதிகாரிகளையும் ஆளுநர் பணியிடை நீக்கம் செய்தார்.
டெல்லி மாநில அரசின் புதிய கலால் கொள்கைக்கு ஆளுநர் அனுமதி அளிக்காததையடுத்து, புதிய கலால் கொள்கை திரும்பப் பெறப்பட்டு, டெல்லியில் 468 தனியார் மதுபானக் கடைகள் கடந்த ஆகஸ்ட் 1- ஆம் தேதியுடன் மூடப்பட்டன. இந்த டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையில் கணினி, செல்போன்கள், ஆவணங்கள் உள்ளிட்டவைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்த நிலையில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸை அனுப்பியது சி.பி.ஐ.
இதனால், மணீஷ் சிசோடியா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சி.பி.ஐ.யின் அதிரடி நடவடிக்கையால் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.