மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் சி.டி.இ.டி. நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் மொழிப்பாடத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 16 மொழிகளை நீக்கிவிட்டு, இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதமுடியும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதனால், தமிழ் உள்ளிட்ட மொழிகளால் தேர்வெழுதலாம் என்று நினைத்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த தேர்வர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பிராந்திய மொழிகளை நீக்கிவிட்டு இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயப்படுத்தி திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘நான்கு மாதங்களில் தேர்வு நடக்கவிருப்பதால் மூன்று மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் தேர்வெழுத அனுமதிக்குமாறு சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.