தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சைதாபாத்தில், கடந்த ஒன்பதாம் தேதி காணாமல் போன ஆறு வயது குழந்தை, பக்கத்து வீட்டில் இறந்துகிடந்தது. அந்தக் குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது, அந்தக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
குழந்தை இறந்துகிடந்த வீட்டைச் சேர்ந்த ராஜு என்ற 30 வயது நபர்தான், இந்தக் கொடூர செயலை செய்திருப்பார் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் வெளிவந்ததிலிருந்து ராஜுவும் தலைமறைவாக இருந்துவந்தார். இதனையடுத்து தெலங்கானா காவல்துறையினர் ஒன்பது தனிப்படைகளை அமைத்து ராஜுவை தேடிவந்தனர்.
மேலும், ராஜுவை பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் பரிசு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ராஜுவின் உடல் ஒரு ரயில்வே தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளியை நாங்கள் பிடித்த பிறகு என்கவுண்டர் நடக்கும் என தெலங்கானா அமைச்சர் ஒருவர் கூறிய நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் உடல் தண்டவாளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற நபருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என சமூகவலைதளங்களில் குரல்கள் ஒலித்துவந்த நிலையில், தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், நீதி கிடைத்துவிட்டதாகவும் சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.