உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று இந்தியாவின் தாஜ்மஹால். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்த உலக அதிசயத்தைப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். இந்தநிலையில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் தாஜ்மஹாலைக் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைரியா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திர சிங், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்ததென்றும், அதை முஸ்லிம்கள் படையெடுப்பாளர்கள் அழித்து தாஜ்மஹாலை கட்டியதாகவும் தெரிவித்துள்ளார். தாஜ்மஹால் ஒரு தேசிய பாரம்பரியமாக அல்லது இராமர் கோவிலாக மாறும் எனக் கூறியுள்ள அவர், யோகி ஆதித்யநாத்தால் இந்தப் பெயர் மாற்றம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மராட்டிய மன்னர் சிவாஜியின் வழித்தோன்றல் எனவும் சுரேந்திர சிங் புகழ்ந்துள்ளார். சுரேந்திர சிங் ஏற்கனவே தாஜ்மஹாலை ராம் மஹால் அல்லது கிருஷ்ணா மஹால் என பெயர் மற்றம் செய்ய வேண்டும் எனவும் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மாளிகையின் பெயரை ஜானகி மாளிகை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.