கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பேரணி நடத்தினார்கள். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீவைக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது. இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
இந்த வகையான தாக்குதல் அங்கு தொடர்ந்து வரும் சூழலில், இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 38க்கும் மேல் சென்றுள்ளது. இந்த சம்பவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே காரணம் என்று சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா தன்னுடைய சாம்னா நாளிதழில் தெரிவித்துள்ளதாவது, " தில்லி சட்டப்பேரவை தேர்தலின் போது மக்களிடம் அமித்ஷா நீண்ட நேரம் பேசினார், வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தார். மக்களுக்கு நல்லது செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் தில்லியில் கலவரம் நடந்த போது அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. உளவுத்துறை அதிகாரி கொல்லப்படுகின்ற போது அவர் ட்ரம்பை வரவேற்று கொண்டுள்ளார், கலவரம் நடந்து முடிந்த பிறகு நடவடிக்கை எடுத்து என்ன பயன். கலவரம் குறித்து கேள்வி எழுப்பினால் தேசத்துரோதி பட்டம் கொடுத்து விடுவார்களோ?" என்று அந்த நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.