தமிழ்நாட்டைத் தொடர்ந்து, டெல்லியில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, கலந்தாய்வு கூட்டம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று (10-03-24) டெல்லியில் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட இந்த கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
அப்போது அவர், “குடும்பத்தில் உள்ள ஆண்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவளிக்காமல் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்குமாறு செய்ய வேண்டியது பெண்களின் பொறுப்பு ஆகும். பல ஆண்கள் பிரதமர் மோடியின் பெயரை மட்டுமே உச்சரிக்கிறார்கள். பெண்களால் மட்டுமே அதை சரியாக அமைக்க முடியும். உங்கள் கணவர் பிரதமர் மோடிக்கு வாக்களிப்பதாகச் சொன்னால், நீங்கள் அவருக்கு இரவு உணவை வழங்க மாட்டேன் என்று சொல்லுங்கள். ஒவ்வொரு கணவனும் தன் மனைவி சொல்வதைக் கேட்க வேண்டும். மேலும், மனைவி அவன் மீது சத்தியம் செய்தால், அவன் அவளைப் பின்பற்றக் கடமைப்பட்டவன்.
உங்கள் கணவரிடம் சொல்லுங்கள், கெஜ்ரிவால் உங்களுக்கு மின்சாரம் இலவசம், பஸ் டிக்கெட்டுகள் இலவசம், இப்போது அவர் பெண்களுக்கு ரூ.1,000 கொடுக்கிறார். அவர்களுக்கு பாஜக என்ன செய்தது? பிறகு ஏன் பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டும்? என்று கேளுங்கள். நகரத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.1,000 கொடுத்து கெஜ்ரிவால் பணத்தை வீணடிக்கிறார் என்று பா.ஜ.க.வினர் கூறுகிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், நீங்கள் பலருடைய மிகப்பெரிய கடன்களை எப்போது தள்ளுபடி செய்தீர்கள்? அப்போது நிதி வீணாகவில்லையா?.
பெண்களுக்கான அதிகாரம் என்ற பெயரில் இதுவரை மோசடிகள் நடந்து வருகின்றன. தங்கள் கட்சியில் உள்ள ஏதாவது ஒரு பெண்ணை பாராட்டிவிட்டு பெண்கள் அதிகாரம் பெற்றுவிட்டதாகக் கூறி வருகின்றனர். ஆனால், நான் ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை செலுத்துகிறேன்” என்று கூறினார்.