
சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டது புதுச்சேரி சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாகவும், அத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் சிபிஐ விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகளை சிபிஐ போலீசார் கைது செய்தனர். பொதுப்பணித்துறையில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த திமுக உறுப்பினர்கள் இது தொடர்பாக விவாதம் நடைபெற வேண்டும் என்றும் இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அனைத்து அலுவல்களையும் ஒத்தி வைத்துவிட்டு இதற்காக தனித் தீர்மானம் நிறைவேற்றி விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் சட்டப்பேரவை தலைவர் இதனை ஏற்க மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை குண்டுக்கட்டாக அவை காவலர்கள் வெளியேற்றினர்.