இந்திய - சீனா எல்லையில் கடந்த ஆண்டு இந்தியா - சீனா இராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், 4 வீரர்கள் மட்டுமே பலியானதாக அந்தநாட்டு இராணுவத்தின் அதிகாரப்பூர்வ ஊடகம் கூறியுள்ளது.
இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் படை விலகல் - படை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தீர்மானம் எட்டப்பட்டது. இருப்பினும் எட்டப்பட்ட தீர்மானம் முழுமையாக இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் எல்லையில் இன்னும் பதற்றம் நீடித்துவருகிறது. இந்தநிலையில், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இம்மாத தொடக்கத்தில் இந்தியா - சீன வீரர்களிடையே சிறிய அளவில் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனை தற்போது இந்திய இராணுவம் மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீனா இராணுவ வீரர்களிடையே சிறிய மோதல் ஏற்பட்டதாக ஊடக செய்தி கூறுகின்றது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், மே முதல் வாரத்தில் ஊடக செய்தியில் கூறியுள்ளதுபோல் எந்த மோதலும் நடைபெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். கிழக்கு லடாக் பிரச்சினைகளில் விரைவாக தீர்வுகளை எட்ட தற்போது நடந்துகொண்டிருக்கும் முயற்சிகளை சீர்குலைக்க விரும்பும் நபர்களிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது" என கூறப்பட்டுள்ளது.