உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82) உடல் நலக்குறைவால் ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (10/10/2022) காலை 08.16 மணிக்கு காலமானார்.
உத்தரபிரதேச மாநில முதலமைச்சராகப் பதவி வகித்துள்ள முலாயம் சிங் யாதவ், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 1989 முதல் 1991, 1993 முதல் 1995, 2003 முதல் 2007 ஆகிய ஆண்டுகளில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக இருந்த முலாயம் சிங் யாதவ், பிரதமராக தேவ கவுடா, ஐ.கே.குஜரால் ஆகியோர் இருந்த போது, அவர்களது அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தவிர்க்கவே முடியாத, அரசியல் சக்தியாக, தலைவராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். அந்த மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவர் அவர். அடிப்படையில் முலாயம் சிங் யாதவ் மல்யுத்தக்காரர். அரசியலில் களம் இறஙகிய பிறகு, உத்தரபிரதேசத்தில் வி.பி.சிங் மற்றும் சந்திரசேகருடன் வெவ்வேறு காலக்கட்டத்தில் இணைந்து செயல்பட்டார்.
இவரது பலமே யாதவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி தான். அரசியலில் திடமான கொள்கையை உடைய முலாயம் சிங் யாதவ், பல தருணங்களிலும் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்தவர். அவரது நிலைப்பாடு எப்போதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானதாகவே இருந்துள்ளது. கடந்த 1992- ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியை நிறுவினார். அந்த காலகட்டத்தில் தான் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, கடுமையாக போராடினார் முலாயம் சிங். இதற்காக, காங்கிரஸ், ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் 1989- ஆம் ஆண்டில் முதன்முறையாக சமாஜ்வாதி கட்சியில் அரியணையில் ஏற்றினார்.
மத்தியில் 1996- ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சி அமைத்த போது, முலாயம் சிங்கின் சமாஜ்வாதியும் ஓர் அங்கமாக இருந்தது. அப்போது, பாதுகாப்புத்துறை அமைச்சரானார் முலாயம் சிங் யாதவ். இந்த பொறுப்பில், அவர் சிறந்த நிர்வாகி என்ற பெயரையும் பெற்றார். தேசிய அளவில் தன்னை உயர்த்திக் கொள்ள அமர்சிங் மூலம், அமிதாப் பச்சன், ஜெயபிரதா ஆகிய திரை நட்சத்திரங்களை கட்சியில் இணைத்தார். இவர்களுக்கு பதவிகளையும் வாரி வழங்கினார். இதனால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.
தொடக்கத்தில் இருந்தே முலாயமுடன் இணைந்திருந்த ஆசம்கான் போன்ற தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறினர். பிறகு அமர்சிங்க்கும், திரைப்பட நட்சத்திரங்களும் கட்சியில் இருந்து வெளியேறினர். முலாயமை விட்டு பிரிந்த தலைவர்கள் ஒரு கட்டத்தில் மீண்டும் கட்சியில் இணைந்தனர்.
2012- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. அப்போது, தான் நான்காவது முறையாக முதலமைச்சராகாமல், 38 வயதே ஆன தனது மகன் அகிலேஷ் யாதவை அரியணை ஏற்றினார். 2016- ஆம் ஆண்டு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷுக்கும், தம்பி சிவ்பால் யாதவிற்கும் மூண்ட மோதலில் சமாஜ்வாதி கட்சிக்குள் பூகம்பம் வெடித்தது. சிவ்பால் யாதவ் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சித் தொடங்கினார்.
தான் உருவாக்கிய சமாஜ்வாதி கட்சியில் இருந்து தனது மகன் அகிலேஷ் யாதவால் வெளியேற்றப்பட்டார் முலாயம் சிங் யாதவ். இந்த உட்கட்சி பூசலால் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார் முலாயம் சிங் யாதவ். தேசிய அரசியலிலும் முத்திரைப் பதித்த முலாயம் சிங் யாதவ், உத்தரபிரதேச மாநில மணிப்பூர் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார்.