நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வேலையின்மையால், இளைஞர்கள் பலரும் பாதிப்படைந்து வருகின்றனர். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்த 10 காலி பணியிடங்களுக்காக 1,000 பேர் வந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள கன்னட மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் கர்நாடகா அரசு புதிய சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை 100 சதவீதம் கன்னட மக்களுக்கு கட்டாய இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களில் பணியாளர்களை அமர்த்தும் போது நிர்வாகப் பணிகளில் 50 சதவீத இடஒதுக்கீடும், நிர்வாகம் அல்லாத பிற பணிகளில் 70 சதவீதமும் கன்னட மக்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் கர்நாடகா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது 15 வருடங்களுக்கு மேலாக அம்மாநிலத்தில் வசித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.