மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. அந்த வகையில், பா.ஜ.க - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.
மேலும், முதற்கட்டமாக நடைபெறும் 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், கர்நாடகா முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஹவேரி மக்களவைத் தொகுதியில் தனது மகன் கே.ஈ.கந்தேஷ் போட்டியிட பா.ஜ.க தலைமைக்கு வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால், அம்மாநில பா.ஜ.க தலைவர் பி.ஓய்.ராகவேந்திரா, அந்த வாய்ப்பை வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கட்சி மீது அதிருப்தியில் இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா, இந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்தார். ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக கே.எஸ்.ஈஸ்வரப்பா அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (12-04-24) தொடங்கியது. இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கலானது வரும் 19ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, ராகவேந்திரா போட்டியிடும் சிவமோகா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இது பா.ஜ.க மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.