நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை ஆளும் பாஜக அரசு குஜராத்தை கைப்பற்ற வேண்டும் எனத் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான ராஜ்கோட்டில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா களமிறக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் மத்திய அமைச்சர் ரூபாலா தனது தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் மேற்கொண்ட பிரச்சாரம் ஒன்று தற்போது பாஜகவிற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, ''ராஜபுத்திர ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தங்களது வீட்டுப் பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்துகொடுத்தனர். ஆனால் எங்கள் சமூகம் மதம் மாறவில்லை. எங்கள் சமூகம் அத்தகைய உறவுகளை ஏற்படுத்தவில்லை..” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு ராஜபுத்திர சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, நாடுமுழுவதும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தவறை உணர்ந்த மத்திய அமைச்சர் ரூபாலா ராஜபுத்திர சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும், ராஜபுத்திர சமுதாய மக்கள் மனம் மாறவில்லை. ரூபாலாவை பதவி நீக்கும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் ராஜ்கோட் தொகுதியில் நிறுத்தப்படும் ரூபாலாவை திரும்பப்பெற வேண்டும் எனப் பாஜகவுக்கு ராஜபுத்திரர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பாஜக தரப்பில் இதற்கு செவிசாய்க்காததால், குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் போராடுவோம் என்று ராஜபுத்திரர்கள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபலாவை மாற்ற பாஜக மாற்ற மறுத்துவிட்ட நிலையில் குஜராத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சபர்கந்தா என்ற இடத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார் கூட்டத்துக்குள் புகுந்த ராஜ்புத் சமூகத்தினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாஜக எம் எல் ஏ ரமண்லால் வோராவை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் குண்டு கட்டாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். மேலும் குஜராத்தில் ராஜ்புத் சமூகத்தினரின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.