இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள், கடந்த 16 ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகளில், முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவருக்கு, இன்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 5.30 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து சுகாதர பணியாளரின் மரணம் குறித்து தெலுங்கனாவின் பொது சுகாதார இயக்குநர் சீனிவாச ராவ், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதற்கட்ட விசாரணையில், சுகாதார பணியாளரின் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்புமில்லை என தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சுகாதர பணியாளரின் மரணம் தொடர்பாக பின்விளைவுகள் குறித்து ஆராயும் குழு விசாரணை நடத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதர ஊழியர் உயிரிழந்த நிலையில், அவர் தடுப்பூசி காரணமாக உயிரிழக்கவில்லை என விளக்கமளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.