ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 370- யை இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலை பெற்று மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் இன்று காலை 11.00 மணிக்கு அறிவித்தார். அப்போது காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370- யை நீக்குவதாகவும், காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து அனைத்து கட்சிகளும் மாநிலங்களவையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒரு மசோதாவை கொண்டு வரும் போது, முதலில் மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெற்று அதன் பிறகு மக்களவை அல்லது மாநிலங்களவையில் மசோதா அறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்து மசோதாவிற்கும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலை ஏற்கனவே பெற்று, அதன் பின் நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தது எதிர்கட்சிகளுக்கிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370- யை மத்திய அரசு நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா புவனேஸ்வர் கலிட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அக்கட்சிக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.