Skip to main content

ஆப்கானுக்கு தடையற்ற உதவி... அனைவரையும் உள்ளடக்கிய அரசு - இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் தீர்மானம்!

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

NSA EIGHT COUNTRIES

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இருப்பினும் இதுவரை தலிபான்களின் அரசை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தானில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் காரணமாக, அந்த நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பல்வேறு உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், தலிபான்களால் தங்கள் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என கவலையடைந்துள்ளன

 

இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பாக நேற்று (10.11.2021) இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்களும், பாதுகாப்புத்துறை செயலாளர்களும் சந்தித்து விவாதித்தினர்.

 

அதனைத்தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலையால் ஆப்கான் மக்கள் படும் துயரத்திற்கு ஆழ்ந்த கவலை தெரிவித்தும், குண்டுஸ், காந்தஹார் மற்றும் காபூல் ஆகிய இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும், அனைவரையும் உள்ளடக்கிய அரசு வேண்டும் என வலியுறுத்தியும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைதியான, பாதுகாப்பான மற்றும் நிலைத்தன்மை கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு வலுவான ஆதரவு தெரிவித்தும், அதேநேரத்தில் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மரியாதை தர வேண்டும் எனவும், ஆப்கானின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மேலும் இந்தக் கூட்டத்தில், ஆப்கானிஸ்தானில் மோசமடைந்துவரும் சமூக - பொருளாதார மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதுடன், ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றியும், நேரடியாகவும் கிடைக்க வேண்டும் என்றும், அந்த நாட்டிற்குள் பாரபட்சமற்ற முறையில் உதவிகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மேலும், தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளிக்கவோ, பயிற்சி அளிக்கவோ, தீவிரவாதிகளுக்கு நிதி அளிப்பதற்காகவோ ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்