தெலங்கானா மாநிலத்தில் பிரசவத்தின்போது, 'சிசு' தலை துண்டிக்கப்பட்டு இறந்த நிலையில், தாயும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினார்கள்.
தெலங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டம் நடிம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரியை, அவரது கணவர் 2 நாட்களுக்கு முன்னர் அச்சம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காகச் சேர்த்தார். சில மணிநேரம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், தாயின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி, ஐதராபாத் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது தான், அந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது. அதாவது, வயிற்றில் இருந்த சிசு தலை துண்டிக்கப்பட்டு தலையில்லாத உடல் மட்டுமே கர்ப்பப் பையில் இருந்தது. அச்சம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால், குழந்தையின் தலை துண்டானது. ஆனால், இதை மறைத்து அவர்களை ஐதாரபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்போது, சாவித்ரியும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அச்சம்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களுடன் வாக்குவாதம் செய்ததோடு, அங்கிருந்த மருத்துவ உபகரணங்களையும் அடித்து நொறுக்கி ஆற்றாமையை வெளிப்படுத்தினர்.
கர்ப்பம் என்பது ஒரு தவம்; குழந்தை பிறப்போ ஒரு வரம்! கர்ப்பிணியானவள் ஈருயிர் அல்லவா! டெக்னாலஜியில் எவ்வளவோ முன்னேறிவிட்ட இந்தக் காலத்திலும், மருத்துவ அலட்சியம் காரணமாக இதுபோன்ற கொடுமைகள் நடக்கின்றன.